ஜெத்தாவில் படித்து சிறப்புடன் தேர்ச்சி பெறும் தமிழ் மாணவ மாணவியர்களையும் அவர்கள் பெற்றோர்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு, ஒவ்வொரு வருடமும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஜெத்தா தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்து வருகிறது.
அதுபோல, இந்த வருடமும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு விருதுகள் வழங்கும் விழா நேற்று ஜூன் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ஜெத்தா அசிசியாவில் அமைந்துள்ள ஸ்டார் உணவகத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட மாணவ மாணவிகள் பெற்றோருடன் வந்து விருதினைப் பெற்றுச் சென்றனர்.
வந்திருந்த அனைவருக்கும் சிறப்பான முறையில் வரவேற்பு வழங்குவதற்கு பூங்கொத்துகளை திரு.மூர்த்தி ஏற்பாடு செய்ய, திரு.ராமானுஜம், திரு.செந்தில் ராஜா, திரு.சீனி அலி, திரு.பிரேம் மற்றும் திரு.அஹ்மத் பாஷா ஆகியோர் இன்முகத்துடன் அனைவரையும் வரவேற்று, நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உறுதணையாக இருந்தனர்.
ஜெத்தா தமிழ்ச் சங்க நிர்வாக உறுப்பினர் திரு.காஜா மொஹிதீன் வரவேற்புரை வழங்க சங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு.சிராஜ், ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் சிறப்புகளையும் செயலாற்றும் தன்மைகளையும் விவரித்தார். ஜெத்தா தமிழ்ச்சங்கம் 25 வது வருடம் கொண்டாடும் இந்த வருடத்தில் இந்த சங்கம் தோன்றுவதற்கு காரணமாக இருந்த மறைந்த உயர்திரு.அப்துல் மாலிக் அவர்களின் பங்கினையும் தொலைநோக்குப் பார்வையையும் திரு சிராஜ் அவர்கள் நினைவு கூர்ந்தார்.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக, இந்திய பன்னாட்டு பள்ளி முதல்வர் திருமதி ஃபராஹ் மசூத், அல் வரூத் பள்ளி முதல்வர் திருமதி புவனேஸ்வரி சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தமிழ் ஆசிரியர்கள் திருமதி பானு மற்றும் திருமதி ஆயிஷா இருவரும் வாழ்த்துரை வழங்க, ஜெத்தா தமிழ்ச் சங்க உறுப்பினர் மருத்துவர் ஜெயஸ்ரீ மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து சிறப்பாக பேசினார். இந்தியன் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரத்தின் பிரதிநிதிகள் அப்துல் மஜீத், ஹலீம், தாஹா, ஹஜ் ஃபோரம் நசீர் வாவாகுஞ் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இறுதியாக திரு சிவா நன்றி வழங்க விழா இனிதே முடிவடைந்தது. திரு ஜெய சங்கர் தொகுத்து வழங்க திரு முரளி அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
அன்புடன் சிராஜ்.
எங்கள் வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்து அமீரகம் சவுதி குவைத் ஓமன் பஹ்ரைன் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள் :https://whatsapp.com/channel/0029VaDyDs0DzgT4vRhiAb16
Comments