top of page
Writer's pictureRaceTamil News

கடல் கடந்த மனிதநேயப் பணி! ஜித்தாவில் இறந்த சகோதரர் உடல் தாயகம் அனுப்பிவைப்பு

தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காவிலுள்ள நாங்கூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆர்.மணிவண்ணன் என்ற சகோதரர் கடந்த 01.08.2024 (வியாழன்) அன்று உடல் நலக் குறைவால் ஜித்தாவிலுள்ள கிங் ஃபாஹத் மருத்துவமனையில் மரணமடைந்தார்.


இறந்தவரின் உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது உடல் தாயகம் அனுப்பிவைப்பதற்காக அவர் பணிபுரிந்த நிறுவனம் ஒரு தனியார் டிராவல்ஸ் மூலமாக முயற்சி செய்தனர். ஆனால் இறந்தவரின் உடலை தாயகம் அனுப்பிவைக்க கால தாமதமும், பொருளாதார வீண் விரையமும் ஏற்பட்டதே தவிர அன்னாரின் உடல் தாயகம் அனுப்பிவைக்கப்பட முடியவில்லை.


இந்நிலையில் 40 நாள்களுக்கு பிறகு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ஜித்தா மண்டல நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு இறந்தவரின் உடலை தாயகம் அனுப்பிவைக்க உதவுமாறு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல நிர்வாகிகள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இந்தியத் தூதரகம் மற்றும் முறையான அனைத்து அரசு ஆவணங்களையும் பெற்று 01.10.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று ஏர் இந்தியா விமானத்தின் மூலம் அன்னாரின் உடல் தாயகம் அனுப்பிவைக்கப்பட்டது.


அன்னாரின் உடல் தாயகம் அனுப்பிவைக்கும் முயற்சியில் ஈடுபடும் போது, இறந்தவரின் பாஸ்போர்ட் காலாவதி ஆனதோடு மட்டுமல்லாமல், ஏற்கனவே உடல் தாயகம் அனுப்பிவைப்பதற்காக காலதாமதம் ஏற்பட்ட காரணத்தால், முன்பே அவருக்கு எக்ஸிட் அடிக்கப்பட்டிருந்த நிலையில், அதுவும் காலாவதியாகிவிட்டது. இந்நிலையில், அவரது பாஸ்போர்டை புதுப்பித்து, மீண்டும் அவருக்கு எக்ஸிட் அடித்து அன்னாரின் உடல் பல சிரமங்களுக்கிடையே அல்லாஹ்வின் நாட்டத்தால் தாயகம் அனுப்பிவைக்கப்பட்டது.


இறந்தவரின் உடல் 02.10.2024 (புதன் கிழமை) அன்று சென்னை விமானம் நிலையம் வந்தடைந்தது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகத்தில் இருந்து ஜித்தா மண்டலத்தின் மூலம் ஏற்கனவே ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இறந்தவரின் உடல் சென்னை விமான நிலையத்திலிருந்து, ஆம்புலன்ஸ் மூலம் இறந்தவரின் ஊரான நாங்கூர் சென்றடைந்ததும், அன்னாரின் உறவினர்கள் அவ்வுடலைப் பெற்றுக்கொண்டனர். அன்னாரின் உடல் 02.10.2024 (புதன் கிழமை) அன்று இந்திய நேரப்படி இரவு 11:00 மணிக்கு தகனம் செய்யப்பட்டது.


இதற்கு உறுதுணையாக இருந்து, முழு ஒத்துழைப்பு வழங்கிய இந்தியன் கவுன்சிலேட் அவர்களுக்கு நாங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இறந்தவர் பணிபுரிந்த நிறுவனத்தில் இருக்கும் ஏமன் நாட்டைச் சேர்ந்த சாலிம் என்ற சகோதரரும் மற்றும் ஜித்தாவில் வசிக்கும் தமிழகத்தில் மன்னார்குடியைச் சேர்ந்த TNTJ கொள்கைச் சகோதரர் ஷர்புதீன் அவர்களும் இதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள்.


இறந்தவரின் உறவினர்கள், தங்களின் அலுவல்களுக்கு மத்தியில் இதற்காக உழைத்த TNTJ ஜித்தா மண்டல நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மேலும் இதற்காக உழைத்த அனைத்து மற்ற சகோதர்களுக்கும் தங்களின் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்தனர்.



39 views0 comments

Comments


bottom of page